'கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு, கைதவம் கண்ணி,ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான், எய்தினன்,இமையா முக்கண் ஈசனே என்ற போதும், நொய்தினின்வென்று, பற்றி தருகுவென், நொடியில் நுன்பால்.
இமையா முக்கண்ஈசனே - இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய சிவபிரானே; ஈண்டு - இந்த இலங்கையில்; ஓர் சிறு பழி இழைக்கும்கற்பால் - ஒரு சிறியஅவமதிப்பைச் செய்ய வேண்டும் என்ற நினைவினால்; கைதவம் கண்ணி - வஞ்சனையைக் கருத்தில் எண்ணி; கொய் தளிர் கோதும் வாழ்க்கை - கொய்யும் தளிர்களை மெதுவாகக் கடித்துத் தின்னும் எளிய வாழ்வை உடைய; கோடரத்து உருவு கொண்டு எய்தினான் - அற்பக்குரங்கினது வடிவத்தைக் கொண்டு வந்துள்ளான்; என்ற போதும் - என்றாலும்; நொய் தினின் வென்று - (அவனை) எளிதில் வென்று; நொடியின் பற்றி, நுன் பால் தருகு வென் - வெகு விரைவில் பிடித்து உன்னிடம் கொணர்ந்து விட்டுவிடுவேன். (4)