என்று, இவைமுதல ஆய எறிதரு படைகள் ஈண்டி, மின் திரண்டனையஆகி, வெயிலொடு நிலவு வீச, துன்று இருந் தூளிபொங்கித் துறுதலால், இறுதிசெல்லாப் பொன் திணிஉலகம் எல்லாம், பூதலம் ஆய மாதோ !
என்று இவை முதலஆய - என்று சொல்லப்படுகின்ற இவை முதலாக உள்ள; எறிதரு படைகள் ஈண்டி - தாக்குதற்குரிய ஆயுதங்கள் நெருங்கியதனால்; மின் திரண்ட அனைய ஆகி - மின்னல்கள் ஒரு சேரத்திரண்டாற் போன்று; வெயிலொடு நிலவு வீச - வெயிலையும் நிலாவையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்க; துன்று இரும் தூளி பொங்கிதுறுதலால் - நெருங்கியமிக்க தூளிகள் மேலெழுந்து (வானத்தில்) நெருங்கியதனால்; இறுதி செல்லா - முடிவுக் காலம் இது என்று கணிக்க முடியாத; பொன் திணி உலகம் எல்லாம் - பொன் திணித்து அமைக்கப்பெற்ற சுவர்க்க உலகம் யாவும்; பூதலம் ஆய - நில உலகம் போன்று விளங்கின. (12)