அக்ககுமாரனைக்கண்டு அனுமன் ஐயுறுதல் 5685. | 'இந்திரசித்தோ ? மற்று அவ் இராவணனேயோ ?' என்னா, சிந்தையின்உவகை கொண்டு முனிவுற்ற குரக்குச் சீயம், 'வந்தனன்;முடிந்தது அன்றோ மனக் கருத்து ?' என்ன வாழ்த்தி, சுந்தரத் தோளைநோக்கி, இராமனைத் தொழுது சொன்னான்; |
முனிவு உற்றகுரக்குச் சீயம் - (அக்ககுமாரன்வரவுகண்டு) பெருங் கோபம் கொண்டுள்ள குரங்குகளுள் சிங்கம் போன்ற அனுமன்; இந்திர சித்தோ ? - (இப்போது போருக்கு வரும் இவன்) இந்திரசித்தோ ?; மற்று அவ் இராவணனேயோ வந்தனன் என்னா - அல்லது (நான் எதிர்பார்த்திருக்கும்) இராவணன் தானோ? போருக்கு வந்துள்ளான் என்று; சிந்தையின் உவகை கொண்டு - மனத்தில் மகிழ்ச்சி மேற்கொண்டு; மனக் கருத்து முடிந்தது அன்றோ - எனது எண்ணம் நிறைவேறிவிட்டதன்றோ; என்ன - என்று சொல்லி; சுந்தரத் தோளை நோக்கி, வாழ்த்தி் - தனது அழகிய தோள்களைப் பார்த்து (அவற்றுக்கு) வாழ்த்துக் கூறி; இராமனைத் தொழுது - இராமபிரானை மனத்தால் நினைத்து வணங்கி விட்டு; சொன்னான்- சொல்லிக் கொண்டான். இராமனைத்தொழுதல் அடிமைச் சிறப்பு. சினம், உவகை இரண்டு உணர்ச்சிகளும் கொண்ட முரண் ஓவியம்பற்றி எண்ணிப் பார்க்க. (18) |