5686. | 'எண்ணியஇருவர்தம்முள் ஒருவனால்; யான் முன் செய்த புண்ணியம்உளதால்; எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே; நண்ணினன் நானும்நின்றேன்; காலனும், நணுகி நின்றான்; கண்ணிய கருமம்இன்றே முடிக்குவென், கடிதின்' என்றான். |
எண்ணிய -(நான்இப்போது போருக்கு வருபவராக) நினைத்த; இருவர்தம்முள் ஒருவனேல் - இந்திரசித்து, இராவணன் என்ற இருவர்களுள்ஒருவனாக இருந்தால்; யான் முன் செய்த புண்ணியம் உளது - யான்முற்பிறப்பில் செய்த புண்ணியப்பயன் எனக்கு உள்ளது; எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே - எங்கள் தலைவனான சுக்கிரீவனும் செய்த தவப்பயன் பொருந்தப் பெற்றவனானான்; நானும் நண்ணினன் நின்றேன் - (பல அரக்கர்களைக் கொன்றிட்ட) நானும் (இவனைக் கொல்வதற்கு) சித்தனாக நிற்கின்றேன்; காலனும் நணுகி நின்றான் - (இவன் உயிரைக் கொண்டு போவதற்கு) யமனும் நெருங்கி நிற்கின்றான்; கண்ணியகருமம் இன்றே கடிதின் முடிக்குவென் - யான் கருதிய காரியத்தை இன்றைக்கே விரைவில் முடித்து விடுவேன்; என்றான் - என்று (அனுமன்) தனக்குள் சொல்லிக் கொண்டான். (19) |