5692. | எறிந்தனநிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும் முறிந்தன; வீரன்மேனி முட்டின மூரி யானை மறிந்தன;மடிந்த, தேரும், வாவும் மாக் குழுவும், ஆவி நெறிந்தன வரம்புஇல் யாக்கை, இலங்கை தன் நிலையின் பேர. |
நிருதர்வெய்தின் எறிந்தன எய்தன படைகள் யாவும் - அரக்கர்கள்சினத்தோடு வீசி எறிந்தவைகளும் தூண்டியவைகளுமான ஆயுதங்கள்எல்லாம்; முறிந்தன - (உட்செல்ல முடியாமல்) ஒடிந்து போயின; வீரன்மேனி முட்டின மூரியானை மறிந்தன - அனுமன் உடம்பை மோதிய வலிமை பொருந்திய யானைகள் இறந்து போயின; தேரும் வாவும் மா குழுவும் மடிந்த - தேர்களும், தாவிச் செல்லும் குதிரைக் கூட்டமும் அழிந்தன; இலங்கை தன் நிலையின்பேர - இலங்கை நகர் தன் இயல்பில் மாறுபட; வரம்பு இல் யாக்கை ஆவி நெறிந்தன - எல்லையில்லாத அரக்கர்களின் உடல்கள் நொறுங்க உயிர் நீங்கின. அரக்கர்படைக்கலம் அனுமன் மேல் பட்டு முறிந்து விழ, அனுமன் தாக்குதலால், இலங்கையின் நிலை கெடுமாறு படைகள் அழிந்தன என்பது கருத்து. (25) |