5693. | காய் எரி,முளி புல் கானில் கலந்தென, காற்றின் செம்மல், 'ஏ' எனும்அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இ்ல்லை; போயவர் உயிரும்போகித் தென் புலம் படர்தல் பொய்யாது; ஆயிர கோடி தூதர்உளர்கொலோ நமனுக்கு அம்மா ? |
காற்றின்செம்மல் காய் எரி - வாயுகுமாரனான அனுமன்பற்றி எரியும்தன்மையுள்ள நெருப்பானது; முளிபுல் கானில் கலந்தென - உலந்த புற்களின்தொகுதியில் சேர்ந்தாற்போல; 'ஏ' எனும் அளவில் - வெகு விரைவில்;கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை - கொல்லுகின்ற அரக்கர்களுக்கு ஒரு அளவு இல்லை; போயவர் உயிரும் - போருக்குச் சென்ற அவ் அரக்கர்களின் உயிர்களும்; தென்புலம் போகி படர்தல் பொய்யாது - தென் திசையாகிய யமனுலகு போய்ச் சேருதல் தவறாது; நமனுக்கு - (இவ்வாறு இறந்த உயிர்களை எல்லாம் கொண்டு போவதற்கு) யமனுக்கு; ஆயிரம் கோடி தூதர் உளரோ ? - ஆயிரம் கோடி தூதர்கள் உள்ளார்களோ? 'காய் எரி',அனுமனுக்கும், 'முளிபுல் கான்' அரக்கர்களுக்கும் உவமையாக வந்தன. அம்மா; வியப்பை உணர்ந்தும் இடைச்சொல் கொல் - ஐயம். ஓ - வினா. (26) |