எழுசீர் ஆசிரியவிருத்தம் 5695. | பிள்ளப்பட்டன நுதல் ஓடைக் கரி, பிறழ்பொன் தேர், பரி, பிழையாமல், அள்ளப்பட்டு அழிகுருதிப் பொரு புனல் ஆறாக, படிசேறு ஆக, 'வள்ளப்பட்டனமகரக் கடல் என மதில்சுற்றிய பதி மறலிக்கு ஓர் கொள்ளைப்பட்டனஉயிர்' என்னும்படி கொன்றான்-ஐம் புலன் வென்றானே ! |
ஐம்புலன்வென்றான் - ஐந்து புலன்களையும்வென்ற அனுமன்; வள்ளப்பட்டன மகரக்கடல் மதிள் எனச் சுற்றிய பதி - மகர மீன்கள் நிறைந்துள்ள வளம் பெற்ற கடல், அரணாகும்படி சூழ்ந்திருக்கும் இலங்கை நகரத்தில் உள்ள; உயிர் - பிராணிகள் யாவும்; மறலிக்கு ஓர் கொள்ளைப் பட்டன என்னும்படி - யமனுக்குப் பெருங் கொள்ளையில் அகப்பட்டுள்ளன என்று (கண்டவர்) கூறுமாறு; நுதல் ஓடைக் கரி - நெற்றிப்பட்டம் அணிந்த யானைகளும்; பிறழ் பொன் தேர், பரி - குப்புற்று விழுந்த அழகிய தேர்களும் குதிரைகளும்; பிள்ளப்பட்டன - சிதைக்கப்பட்டன; அள்ளப்பட்டு அழிகுருதி பொரு புனல் ஆறு ஆக - (வருகின்ற பிராணிகள் எல்லாம்) வாரி எடுக்கப்பட்டு அழிந்த (அரக்கர்களுடைய) மோதும் இரத்த வெள்ளமாகிய நீர், ஆறாய ஓடவும்; படி சேறு ஆக - அதனால் பூமி சேறாக ஆகவும்; பிழையாமல் கொன்றான் - எவரும் தப்பிப் போகாமல் கொன்று அழித்தான். சிதைக்கப்பட்டபடையின் குருதி, ஆறாகவும், உடல் முதலியன ஆற்றினடியில் படியும் சேறாகவும் காணப்பட்டன. 'நெறிநின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்' (5253) என அனுமனைப் பிராட்டி கணித்ததை உருக்காட்டு படலத்தில் கம்பர் குறித்திருப்பது நினைவு கூரத்தக்கது. வள் - வளம்; (28) |