5696.

'தேரே பட்டன' என்றார் சிலர்; சிலர்,
     'தெறு கண்செம் முக வயிரத் தோள்

பேரே பட்டன'என்றார்; சிலர் சிலர்,
     'பரியே பட்டன பெரிது' என்றார்.
'காரே பட்டனநுதல் ஓடைக் கட
     கரியேபட்டன கடிது' என்றார்;
நேரே பட்டவர்பட, மாடே, தனி,
     நில்லாஉயிரொடு நின்றாரே.

     நேரே பட்டவர்பட - போரில் அனுமனுக்கு எதிரே தோன்றிய
அரக்கவீரர்கள் அழிந்து போக; மாடே - (ஒதுக்கமான) பக்கங்களில்; நில்லா
உயிரொடு தனி நின்றார் சிலர் -
(அப்போரைப் பார்த்த அளவில்
அச்சத்தால் தம்முடலில்) நில்லாது தத்தளிக்கும் நிலையில் உள்ள உயிரோடு
தனியே நின்று கொண்டிருந்தவர்களில் சிலர்; தேரே பட்டன என்றார் -
தேர்களே அழிந்து போயின என்று கூறினார்கள்; சிலர் - மற்றும் சிலர்;
தெறுகண் செம்முக வயிரத் தோள் பேரே பட்டன என்றார் -
கோபிக்கும்
கண்களையும் சிவந்த முகங்களையும் உறுதியான தோள்களையும் உடைய
காலாட் படைகளே இறந்தது என்று சொன்னார்கள்; சிலர் - மற்றும் சிலர்;
பரியே பெரிது பட்டன என்றார் -
குதிரைகளே பெரிதும் அழிந்து போயின
என்றார்கள்; சிலர் - வேறு சிலர்; காரேபட்டன நுதல் ஓடை கரியே -
மேகம் போன்றனவான நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளே; கடிது
பட்டன என்றார் -
விரைவாய் அழிந்தன என்றனர்.

     சிலர்தேர்களையும், சிலர் வீரர்களையும், சிலர் குதிரைகளையும், சிலர்
யானைகளையும் தனித்தனி பார்த்து நின்று அவ்வவற்றின் அழிவின் மிகுதியால்
பிற ஒன்றையும் பார்க்கும் திறமின்றித்தாம் கண்டவற்றையே கூறினர்
என்பதாயிற்று. 'தோள் கண்டார் தோளே கண்டார்' (கம்ப. 181) என்ற
செய்யுளை நினைப்பூட்டுவது.                                 (29)