5700.

எய்தான்,வாளிகள், எரி வாய் உமிழ்வன,
     ஈர்-ஏழ்;எதிர் அவை பார் சேரப்
பெய்தான், மணிஎழு ஒன்றால்; அன்று, அது,
     பொடியாய் உதிர்வுற, வடி வாளி,
வெய்தாயின, பலவிட்டான்; வீரனும்,
     வேறு ஓர்படை இலன், மாறா வெங்
கைதானே பொருபடை ஆக, தொடர்
     கால் ஆர்தேர்அதன் மேல் ஆனான்.

     எரிவாய்உமிழ்வன - நெருப்பைத்தம்மிடமிருந்து கக்குவனவான; ஈர்
ஏழ் வாளிகள் எதிர் எய்தான் -
பதினான்கு அம்புகளை (அக்ககுமாரன்)
எதிரே (அனுமன் மீது) செலுத்தினான்; அவை பார் சேர - அவ்வம்புகள்
தரையிலே விழும்படி; மணி எழு ஒன்றால் - தன்கையில் கொண்ட) அழகிய
இரும்புத்தண்டு ஒன்றினால்; பெய்தான் - (அனுமன் அவற்றைப்)
பயனற்றனவாக வீழ்த்தினான்; அன்று,அது பொடியாய் உதிர்வு உற -
அப்பொழுது, அந்த இரும்புத்தண்டு பொடியாக உதிர்ந்து போகும்படி; வெய்து
ஆயின வடிவாளி பல விட்டான் -
மேலும் கொடுமையான கூரியபல
அம்புகளை (அக்ககுமாரன்) (அனுமன் மீது) பிரயோகித்தான்; வீரனும் -
வீரனான அனுமனும்; வேறு ஓர் படை இலன் - வேறு ஒரு ஆயுதம்
தன்னிடம் இல்லாதவனாகி; மாறா - (அவ்வம்புகளுக்கு) எதிராக;
வெங்கைதானே பொரு படை ஆக -
வலிய தன்கைகளையே போர்
செய்யும் படைகளாகக் கொண்டு; தொடர்கால் ஆர்தேர் அதன் மேல்
ஆனான் -
தன் முன்னே தொடர்ந்து வரும் சக்கரங்கள் பொருந்திய
(அக்ககுமாரனது) தேரின் மீது ஏறினான்.

      கால் - சக்கரம்.                                       (33)