5712.

ஓடினார்,உயிர்கள் நாடு உடல்கள்போல்; உறுதியால்
வீடினார்;வீடினார் மிடை உடல் குவைகள்வாய்,
நாடினார், மடநலார்; நவை இலா நண்பரைக்
கூடினார்; ஊடினார்உம்பர் வாழ் கொம்பு அனார்.

     மட நலார் -பேதைமைத்தன்மை உடைய அரக்கமகளிர்; உயிர்கள்
நாடு உடல்கள் போல ஓடினார் -
தமது உயிர்களைத் தேடிச் செல்லும்
உடல்கள் போல (தமது கணவரைத் தேடிக்கொண்டு) ஓடினார்கள்; உறுதியால்
வீடினார் -
அவ்வாறு ஓடியவர்கள் தம் கற்பின் திண்மையால் உயிரை விட்டு
மாண்டனர்; வீடினார் மிடை உடல் குவைகள் வாய் - இறந்து கிடந்த
அரக்க வீரரின் பிணக் குவியல்களிடையே; நாடினார் - தம் கணவன்மார்
உடலைத் தேடினர்; நவை இலா நண்பரைக் கூடினார் - குற்றம் அற்றதம்
கணவன்மாரைச் சேரப் பெற்றார்கள்; உம்பர் வாழ் கொம்பு அனார்
ஊடினார் -
(வீர சுவர்க்கம் சேர்ந்த அக்கணவன்மார்களைத் தழுவிய)
தேவலோகத்து வாழ்கின்ற பூங்கொடி போன்ற அமர மகளிர் பிணங்கினார்கள்.

     நண்பர் என்றசொல் இங்கே கணவரைக் குறித்தது. மடந்தையோடு
எம்மிடை நட்பு என்ற குறளை நினைக. 'தரைமகள்தன் கொழுநன்தன் உடலந்
தன்னைத் தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்டு அரமகளிர்
அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவிஒக்க
 விடுவாளைக் காண்மின்காண்மின்
(கலி - பரணி - 483) என்ற பாடல் ஒப்பிட்டுச் சிந்திக்கத்தக்கது.       (45)