5713.

தீட்டுவாள் அனைய கண் தெரிவை, ஓர் திரு
                                அனாள்,
ஆட்டில்நின்றுஅயர்வது ஓர் அறு தலைக்
                                குறையினைக்
கூட்டி, 'நின்ஆர் உயிர்த் துணைவன், எம் கோனை,
                                 நீ,
காட்டுவாயாதி'என்று, அழுது கை கூப்பினாள்.

     தீட்டுவாள் அனையகண் - தீட்டப் பெற்ற வாள் போன்ற கண்களை
உடைய; திரு அனாள் ஓர் தெரிவை - இலக்குமி போன்ற ஒரு அரக்கி;
ஆட்டில் நின்று அயர்வது ஓர் அறு தலைக் குறையினைக் கூட்டி -
கூத்தாடும் தொழிலில் இருந்து சோர்வதான தலையற்றதோர் உடலை
(கவந்தத்தை) தலையோடு சேர்த்து,; (அதனை நோக்கி) 'நின் ஆர் உயிர்த்
துணைவன் -
'உனது ஒப்பற்ற உயிர்த் துணைவனாகிய; எம் கோவினை -
எமது தலைவனை; நீ காட்டுவாய் ஆதி' என்று - நீ எனக்குக்
காட்டுவாயாக' என்று சொல்லி; அழுது கை கூப்பினாள் -
அழுதவளாய்த்தனது கைகளைக்குவித்து வணங்கினாள்.

     வீரம் மிடைந்தஅவல ஓவியமாகக் கணவனைத் தேடும் அரக்கி
சித்தரிக்கப்பட்டுள்ளது அருமை.                                 (46)