இராவணனிடம்மண்டோதரி முதலியோர் அழுது புலம்புதல்

                         கலிவிருத்தம்
                        (வேறுவகை)

5715.

கயல்மகிழ் கண் இணை கலுழி கான்று உக,
புயல் மகிழ் புரிகுழல் பொடி அளாவுற,
அயன் மகன் மகன்மகன் அடியின் வீழ்ந்தனள்,
மயன் மகள்;வயிறு அலைத்து அலறி மாழ்கினாள்.

     மயன் மகள் -அசுரசிற்பியாகிய மயனது மகளான மண்டோதரி; கயல்
மகிழ் கண் இணை -
கயல் மீன் போன்று மதர்த்திருக்கும் கண்கள்
இரண்டும்; கலுழி கான்று உக - நீர் பெருகச் சிந்தவும்; புயல் மகிழ்புரி
குழல் பொடி அளாவுற -
காள மேகத்தை  ஒத்த முறுக்கிவிட்ட கூந்தல்
மண்ணின் புழுதியிலே புரளவும்; அயன் மகன் மகன் மகன் - பிரமதேவன்
குமாரனான புலத்திய முனிவரின் மகனாகிய விச்ரவஸ் என்பவனது மகனாகிய
இராவணனது; அடியில் வீழ்ந்தனள் - பாதங்களில் விழுந்து; வயிறு
அலைத்து -
வயிற்றில் அடித்துக்  கொண்டு; மாழ்கினாள் - கதறிப்
புலம்பினாள்.

     மண்டோதரி, தன்குமாரன் அட்சன் (அக்ககுமாரன்)
இறக்கக்காரணமாயிருந்த இராவணனது கால்களில் விழுந்து அழுது
புலம்பினாள். மகளிர், பெரும் துக்கம் வந்த போது, வயிற்றில் அடித்துக்
கொள்ளும் இயல்பினராவர்.                                (48)