5724.

தாள் இணைவீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்;
                               தறுகணானும்
தோள் இணைபற்றி ஏந்தித் தழுவினன், அழுது
                               சோர்ந்தான்;
வாள் இணை நெடுங்கண் மாதர் வயிறு அலைத்து
                               அலறி மாழ்க,
மீளிபோல்மொய்ம்பினானும் விலக்கினன்;
                               விளம்பலுற்றான்;

     தாள் இணைவீழ்ந்தான் - (அரண்மனை புகுந்தஇந்திரசித்து)
இராவணனது இரு பாதங்களில் விழுந்து; தம்பிக்கு இரங்குவான் - தம்பி
அக்ககுமாரன் இறந்தமைக்குத் துயர் கொண்டு புலம்புவானான்; தறுகணானும்
-
அஞ்சாமை உடைய இராவணனும்; தோள் இணை பற்றி ஏந்தி -
இந்திரசித்துவின் இரண்டு தோள்களையும் பிடித்து எடுத்து; தழுவினன் அழுது
சோர்ந்தான் -
அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு தானும் அழுது
வருந்திச் சோர்வுற்றான்; இணைவாள் நெடுங்கண் மாதர் - இருவாள்கள்
போன்ற நெடுங்கண்களை உடைய அரக்கர் குல மகளிர்கள்; வயிறு அலைத்து
அலறி மாழ்க -
வயிற்றில் அடித்துக்
 கொண்டு கதறிமயங்கிச் சோர;
மீளிபோல் மொய்ம்பினானும் -
சிங்கம் போன்ற வலிமை உடைய
இந்திரசித்தும்; விலக்கினன் விளம்பலுற்றான் - அவர்களை விலக்கி,
தந்தையை நோக்கிப் பேசத் தொடங்கினான்.                      (8)