5725.

'ஒன்று நீஉறுதி ஓராய்; உற்றிருந்து உளையகிற்றி;
வன் திறல்குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும்,
                                 அன்னோ !
"சென்று நீர்பொருதிர்" என்று, திறத் திறம்
                             செலுத்தி, தேயக்
கொன்றனை நீயேஅன்றோ, அரக்கர்தம் குழுவை
                             எல்லாம் ?

     நீ உறுதி ஒன்றும்ஓராய் - நீ, நன்மை தரத்தக்கதான ஒன்றையும்
ஆலோசிக்கின்றாயல்லை; உற்றிருந்து உளையகிற்றி - நடந்ததை அநுபவித்து
வாளா இருந்து வருந்துகின்றாய்; வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி
உணர்ந்தும் -
கொடிய வலிமை உடைய குரங்கினது வலியின் தன்மையை
முறைப்படி உணர்ந்திருந்தும்; நீர் சென்று பொருதிர் என்று - நீங்கள் போய்அக்குரங்குடன் போர் செய்யுங்கள் என்று; திறம் திறம் செலுத்தி -
வரிசைவரிசையாக அனுப்பி; அரக்கர்தம் குழுவை எல்லாம் - அரக்கர்
கூட்டத்தைஎல்லாம்; நீயே அன்றோ தேயக் கொன்றனை - நீ அல்லவா
குறைந்தொழியும்படி கொன்று விட்டாய்.

     'அன்னோ' என்பதுகழிவிரக்கத்தைக் காட்டுவது. மரபுளி உணர்தல்.
அனுமன் கடல் கடந்து வந்து அசோகவனத்தை அழித்தது முதலாக நடந்த
செயல்களை அறிதல்.                                       (9)