| 5726. | 'கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர் என்று இப் பைங் கழல்அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச் சேனை, இங்கு ஒருபேரும்மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய் ! சங்கரன், அயன்,மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே ! |
எந்தாய் -எனதுதந்தையே !; கிங்கரர், சம்புமாலி - கிங்கரர் என்னும்போர் வீரர்களும், சம்புமாலி என்பவனும்; கேடு இலா ஐவர் - அழிவில்லாத பஞ்சசேனாபதிகளும்; என்று இப்பைங்கழல் அரக்கரோடும் - என்று சொல்லப்படுகின்ற இந்தப் பசுமையான வீரக்கழல் அணிந்த அரக்க வீரர்களுடன்; உடன்சென்ற பகுதிச்சேனை - கூடிச் சென்ற சேனையின் பாகங்களில்; இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல் - ஒருவரேனும் இங்குத் திரும்பி வந்தார் இல்லை என்றால்; குரங்கு அது ஆமே ! - அது குரங்கு என்று சொல்லத்தக்கதா ?; சங்கரன், அயன், மால் என்பார் தாம் - சிவபிரான், பிரமன், திருமால் என்று சொல்லப்படுகின்ற மும்மூர்த்திகள் தாம்; எனும் தகையது - என்று கருதத்தகுவதாகும். போருக்குச்சென்றவர் ஒருவரும் மீளவில்லை என்றால் எதிர்த்துப் போர் செய்வது குரங்கா ? அன்று; மும்மூர்த்திகளின் சொரூபம் என்று கருத வேண்டும் என்பது கருத்து. (10) |