5731.

தீயினில்செவ்வே வைத்து, சின்னங்கள் வேறு வேறு
வாயினில் ஊதுவீரர் வழியிடம் பெறாது செல்ல,
தாயவள் சொல்மாறாது தவம் புரிந்து அறத்தின்
                          நின்ற
நாயகன் தூதன்தானும், நோக்கினன்;
நகையும்
                         கொண்டான்.*

     தீயினில் -நெருப்பைப்போல; செவ்வே வைத்து - நன்றாகப்
பொருத்தி வைத்து; வேறு வேறு சின்னங்கள் - வெவ்வேறான ஊது
கொம்புகளை; வாயினில் ஊதுவீரர் - வாயில் வைத்து ஊதுகின்ற வீரர்கள்;
வழியிடம் பெறாது செல்ல -
செல்லுதற்கு வழி கிடைக்காமல் அரிதின்
செல்ல (இக்காட்சியை); தாயவள் சொல் மறாது தவம் புரிந்து அறத்தின்
நின்ற நாயகன் தூதன் தானும் -
தன் தாயான கைகேயி சொன்ன சொல்லை
மறுக்காமல் தவம் செய்து துறவறத்தில் நின்ற இராமபிரானது தூதனாகிய
அனுமானும்; நோக்கினன் - கண்ணாலும் கருத்தாலும் பார்த்தான்; நகையும்
கொண்டான் -
(போர் மிகக் கிடைக்க இருக்கிறது என்பதனால்) சிரிப்பும்
கொண்டான்.

     சின்னம் - ஊதுகொம்புகள். திருச்சின்னம் என்று கூறுவது வழக்கு.
இவற்றின் ஒலி கேட்போர் காதில் தீப்போலப் பாய்கிறது எனலும் ஒன்று. "தாழ்
இரும் சடைகள் தாங்கித் தாங்க அரும் தவம் மேற்கொண்டு" (கம்ப. 1601)
என்பது தாய் கூறிய வார்த்தை ஆதலின் அதனை மேற்கொண்டு தவம் புரிந்து
அறத்தின் நின்ற நாயகன் இராமன் ஆனான். போர் பெற்றால் வீரர் மகிழ்வர்.
இந்திர சித்துவின் போர் ஆரவாரப் புறப்பாடு கண்ட அனுமனுக்கு அது
மகிழ்ச்சியை உண்டாக்கி நகையைத் தோற்றுவித்தது. தான் - உரையசை.                                               (15)