5732.

செம்பொனின் தேரின் பாங்கர்ச் செங்குடைத்
                            தொங்கற் காடும்,
உம்பரின்கொம்பர் ஒத்த, ஒரு பிடி நுசுப்பின், செவ்
                            வாய்,
வம்பு அவிழ்குழலினார்கள் சாமரை பதைத்து வீச,
கொம்பொடும்கோடு தாரை குடர் பறித்து ஊத
                            வந்தான்.*

     செம்பொனின்தேரின் பாங்கர்ச் - செம்பொன்னால் ஆகியதேரின்
பக்கத்தில்; செங்குடைத் தொங்கற்காடும் - சிவந்த குடைமாலைகளின்
கூட்டமும் (அதனைச் சார்ந்து); உம்பரின் கொம்பர் ஒத்த - தேவர்
உலகத்துக் கற்பகக் கொம்பினை ஒத்த; ஒரு பிடி நுசுப்பின் - ஒப்பற்ற
கைப்பிடி அளவே உள்ள இடையையும்; செவ்வாய் - சிவந்த வாயையும்;
வம்பு அவிழ் குழலினார்கள் -
மணம் விரியும் (மலரணிந்த) கூந்தலையும்
உடைய மகளிர்; சாமரை பதைத்து வீச - கவரிகளைக் கொண்டு துடிக்கும்படி
வீச; கொம்பு, கோடு, தாரை - கொம்பு முதலிய
 வாத்திய விசேடங்கள்;குடர்
பறித்து ஊத -
கேட்போர் குடலைப் பறித்தாற் போல் பேரொலியவாய்
ஊதப்பெற; வந்தான் - (இந்திரசித்து) வந்தான்.

     செம்பொன்தேர்,செங்குடை மாலைக்காடு, மகளிர் வீசும் வெண்சாமரை
என்று மாறுபட்ட வண்ணக் கலவையின் நடுவே வருவதாகப்
புனைந்துரைத்தார். ஊதுவோர் காற்றை வயிற்றிலிருந்து மேல் கொண்டு வந்து
ஊதலின் 'குடர் பறித்து' என்பதை அவர்க்கே ஆக்கினும் தவறில்லை. பிடி
நுசுப்பின் - கைப்பிடி அளவான இடை இ்ங்கே 'பிடி' என்பது யானை
எனக்கூறின் அது நுசுப்பைப் பெரிதாக்கி விடும் ஆதலின் 'கொம்பர் ஒத்த'
என்ற முன் உவமைக்கு ஏலாதாம். பிடி யானயாயின வழி நடைக்கே
உவமையாம் ஆதலின். எண் ஒடு ஒருவழி நின்றது.                 (16)