5733.

தொங்கலின் காடு நூறாயிரம் என்பர்; தோகைப்
                         பிச்சம்,
பங்கம் இல்பணிபலம் பத்துப் பத்து நூறு ஆகும்
                         என்பர்;
செங் குடைவெண்மை, நீலம், பச்சையோடு இனைய
                         எல்லாம்
பொங்கு ஒளிமன்னு கோடி புரந்தராதித்தர் சுற்ற.*

     தொங்கலின் காடுநூறாயிரம் என்பர் - மாலைகளின் கூட்டம்
இலக்கத்திற்கு மேற்பட்டது என்று கூறுவர்; தோகைப் பிச்சம் - மயில்
தோகையால் ஆகிய ஆலவட்டமும்; பங்கம் இல் பணிலம் - குறை இல்லாத
சங்குகளும்; பத்து பத்து நூறு ஆகும் என்பர் - பத்தாயிரம் என்று கூறுவர்;
செங்குடை வெண்மை நீலம் பச்சையோடு இனைய எல்லாம் -
செங்குடை,
வெண்குடை, நீலக்குடை, பச்சைக்குடை என்று இப்படிச் சொல்லப்பட்ட
எல்லாம்; பொங்கு ஒளி மன்னு - மிகுந்த (பலநிற) ஒளி நிலைபெற்ற; கோடி
புரந்தர ஆதித்தர் சுற்ற -
கோடிக்கணக்கான இ்ந்திரர்களும் சூரியர்களும்
போல சுற்றிவர வந்தான்.

     தோகைப்பிச்சம் - மயில் தோகையால் ஆகிய (வெயில் மறைப்பு)
ஆலவட்டம் எனப்பெறும். இப்போது 'Sun shade' என்பது ஆகும்.
பத்தாயிரம் என்னாது பத்துப் பத்து நூறு என்று பெருக்கியது ஒவ்வொன்றும்
பத்தாயிரம் எனற்கு என்க. பல் நிறக்குடைகள் தாங்கிக் கோடிக்கணக்கான
இந்திரரும் சூரியரும் சுற்றி வருகின்றனர் எனலும் ஆம்.             (17)