5734.

தீ எழுபொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர்
                                   சேர
வாய்களில் ஊத,மண்ணும் வானமும் மறுகிச்
                                   சோர்ந்த;
'ஆயது முடிவுகாலம்; கிளர்ந்தனர் அரக்கர்' என்று
வாய்களின் பேசிவானோர் மண்டினர், மலைதல்
                                   நோக்கி.*

     வீழ் அரக்கர் -போரைவிரும்பிய அரக்கர்கள்; தீ எழு பொன்னின்
சின்னம் -
நெருப்பிலிருந்து காய்ச்சி எழுப்பிய பொன்னால் ஆகிய ஊது
கொம்புகளை; மேவி - விரும்பி; சேர வாய்களில் ஊத - ஒன்றாகப் பலரும்
வாய்களில் வைத்து ஊத (அவ் ஒலி கேட்டு); மண்ணும் வானமும் மறுகிச்
சோர்ந்த -
மண்ணுலக மக்களும், விண்ணுலகத்தவரும் கலக்கமுற்றுச்
சோர்ந்தனர்; வானோர் - தேவர்கள்; அரக்கர் கிளர்ந்தனர் - அரக்கர்
கிளர்ச்சி பெற்றுவிட்டார்கள்; முடிவுகாலம் ஆயது - உலக அழிவுக்காலம்
நெருங்கியது; என்று வாய்களின் பேசி - என்று தம் வாய்களினால்
பேசிக்கொண்டு; மலைதல் நோக்கி மண்டினர் - போரிடுதலைப் பார்க்க
விரும்பி நெருங்கினார்கள்.

     தீ எழு பொன் -'சுடச் சுடரும் பொன்' என்பதை (குறள் 267)
நினைப்பூட்டும். பேசி என்றாலே அமையவும் 'வாய்களின்' என்றது அரக்கரால்
துன்புறும் தேவர் அரக்கர்களைப் பற்றியே எப்போதும் பேசும் வாயை
உடையவர் என்று அவ்வாயின் இழிவினைச் சிறப்பித்ததாம்.            (18)