5736. | புலித்தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்னக் கலித்து ஓடி,உம்பரோடும் ஓடின, காலன் அஞ்ச; ஒலித்து ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட, வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி.* |
புலித்தோலின்பலகை எல்லாம் - புலித்தோலால் ஆகியநீண்ட கேடயங்கள் எல்லாம்; பொருகடல் புரவி என்ன - போரிடும் குதிரைக்கடல் என்று சொல்லும்படி; கலித்து ஓடி - செருக்கி மேற்சென்று; காலன் அஞ்ச - யமனும் பயப்படும்படி; உம்பரோடும் ஓடின - தேவர்கள் மேலே சென்றன; திண் சிலைகள் எல்லாம் வலித்தார் - வலிய விற்களை எல்லாம் பூட்டினார்கள்; கரத்தின் மாரி - அதிலிருந்து புறப்பட்ட அம்பு மழை; உவா ஆழி ஒலித்துற்றென்ன - பௌர்ணமி நாளிலே கடல் பொங்கிக் கிளர்ந்து மேல் எழும்பியது போல; உம்பர் தோரணத்தை முட்ட மண்டின - தேவருலகத்தில் கட்டிய தோரண வாயிலை முட்டும்படி நெருங்கின. தோலாற்செய்யப்பட்டது கேடயம் - கிடுகுபடை என்பர். பகைவர் வீசும் படைகள் தன்மேல் வீழாதபடித் தடுப்பதற்கு அமைத்திருப்பது ஆகும். அது புலித்தோலாற் செய்யப் பெறல் உண்டு போலும். படை அல்லாத கேடயமே யமனும் அஞ்சும்படி மேற்சென்றது என்று வியந்ததாம். (20) |