5737.

தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க,
உடுஇனம் ஆனதுஎல்லாம் உதிர்ந்தன, பூ இது
                                   என்ன;
அடு புலி அனையவீரர் அமரினில் ஆர்ப்பும், ஆனை
நெடு மணிமுழக்கும்ஓதை மண்ணகம் நிறைந்தது
                                  அன்றே.*

     தடுவையின்மரங்கள், சகடைகள், திமிலை தாக்க - தடுவை மரம்,
சகடைப்பறை, திமிலைப்பறை ஆகிய வாத்தியங்கள் அடிக்கப்பெற அதனால்;
பூ இது என்ன - மரங்களிலிருந்து பூ உதிர்தல் போல; உடு இனம் ஆனது
எல்லாம் உதிர்ந்தன
- நட்சத்திரங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டன;
அடுபுலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் -
கொல்லும் புலியை ஒத்த
வீரர்கள் போரிடத்து ஆர்ப்பரித்ததனால் உண்டாகியதும்; ஆனை நெடுமணி
முழக்கம் -
யானைக் கழுத்தில் கட்டிவிடப்படும் நீண்ட மணி முழக்கினால்
ஆகியதும் ஆகிய; ஓதை மண்ணகம் நிறைந்தது - ஒலிகள் மண்ணிடத்தே
நிறைந்தது.

     தடுவைமரம் என்பதுஒருவகை வாத்திய விசேடம் - ஒலி அதிர்ச்சியால்
விண்மீன் உதிர்ந்தன. ஆர்ப்பும், முழக்கும் ஆகிய ஓதை என்க. அன்று, ஏ
அசைகள்.                                               (21)