கலிவிருத்தம் 5738. | எண்பதினாயிர கோடி இருஞ் சிலை புண் பயில் வெஞ்சரம் பூட்டினர், ஒன்றோ ? விண் புகுதோரணம் மெல்ல மறைந்த; மண் புகழ்சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான்.* |
எண்பதினாயிரகோடி இருஞ்சிலை - எண்பதாயிரகோடிக்கணக்கான விற்களை; புண்பயில் வெஞ்சரம் பூட்டினர் - புண்ணிற் பழகிய கொடிய அம்புகளைப் பூட்டியவர்களாய் விடத் தொடங்கினர்; ஒன்றோ - அம்மட்டோ; விண்புகு தோரணம் மெல்ல மறைந்த - வானைத் தீண்டும் தோரணமானது மெல்ல மறைந்து போயிற்று; மண்புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் - உலகு ஏத்தும் புகழாளனாகிய அனுமன் பெரும் போரால் வாழ்ந்தான் ஆயினன். தோரணவாயில்அனுமன் இருப்பிடம் ஆதலின் அதனை மறைத்த படைப் பெருக்கம், மாறாதிருக்கும் பெருந்தீனியாய் அமைவது என்பதால் 'மாருதிவாழ்ந்தான்' என்றார் போலும். ஒன்றோ - வியப்புச்சொல். (22) |