5750.

சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன்
முந்தி எழுந்துமுனிந்தமை நோக்கி,
'வெந் திறலாய்! விரைவின் வருக !' என்றான்;
'இந்திரசித்துஇவன்' என்பது இசைத்தான்.*

     சிந்தைஉவந்தவன் ஆகி - (அனுமன்) மனமகிழ்ச்சிஅடைந்து;
அரக்கன் முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி -
இந்திர சித்து முற்படச்
சீறிப் புறப்பட்டதைப் பார்த்து; 'வெந்திறலாய்- கொடிய வலிமை உடைய
இந்திரசித்தே !; விரைவின் வருக' - சடுதியில் போர்க்கு வருக; என்றான் -
என்று அழைத்தான்; இவன் இந்திரசித்து என்பது இசைத்தான் - இவன்
இந்திரசித்து என்பதனை (ஒருவன்) எடுத்துக் கூறினான்.

     முன்பாட்டுடன்இப்பாட்டு அந்தாதித் தொடைபோல் அமைந்தது காண்க. 
                                                          (34)