5753. | 'சந்திரன்அருக்கனொடு தாரகைஇனங்கள் சிந்திட எழுந்து,திசை ஈண்ட, எதிர் செவ்வே வந்த இவ்அரக்கர் குழு வன்மை இது என்றால், இந்திரனை அன்றிஉலகு ஏழும் வெலும்' என்றான்.* |
சந்திரன்அருக்கனொடு தாரகை இனங்கள் சிந்திட - சூரிய சந்திரர்களும் நட்சத்திரக் கூட்டங்களும் கீழே பூப்போலச் சிதறும்படி; எழுந்து - புறப்பட்டு; திசை ஈண்ட - திசைகளிலே (சேனை) நெருங்க; செவ்வே - செம்மையாக; எதிர் வந்த இவ் அரக்கர் குழு வன்மை இது என்றால் - எதிரே போரிட வந்த இந்த அரக்கர் கூட்டத்தின் பெருவலி இதுவாக இருக்குமானால் (இச்சேனை); 'இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும்' என்றான் - இந்திரனை மட்டும் அல்லாமல் ஏழ் உலகங்களையுமே வெல்லும் என்று அனுமன் கூறினான். 'அன்னவை கூறுதல்உற்றான்' (கம்ப. 5748) என்பதில் அனுமன் கூறியதாகக் குறிப்பிட்டது இதுபோலும். சேனைப் பெருமை கண்ட அனுமன் இவன் இந்திர சித்துவே அல்ல ஏழ் உலக சித்து என்றான் என்பது இப்பாடற் பொருள். 5729 முதல் 5753வரை உள்ள 25 பாடல்கள், கவிச்சக்கரவர்த்தியின் பாடல்களின் பக்கம் வந்து நிற்கவும் தகுதியற்றவை; கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மயங்கவைத்தல் என்பது முதலாகிய குறைகள் நிரம்ப உள்ளவை; பொருள் பொருத்தமுற அமையாதவை; பொருட்சிறப்பும் அற்றவை; ஆயினும், கம்பன் கழக மூலப் பதிப்பை இப்பதிப்புக்கு அடிப்படையாகக் கொண்டமையால் உரை எழுதப் பெற்று இப்பதிப்பில் சேர்க்கப் பெற்றன என்பதைக் கற்போர் உணர்க. (37) |