| 5756. | சென்றனன்என்ப மன்னோ; திசைகளோடு உலகம் எல்லாம் வென்றவன் இவன்என்றாலும், வீரத்தே நின்ற வீரன், அன்று அது கண்டஆழி அனுமனை, 'அமரின் ஆற்றல் நன்று' என உவகைகொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார். |
சென்றனன் இவன்- இவ்வாறாகப் போருக்குச் சென்ற இந்த மேகநாதன்; திசைகளோடு உலகம் எல்லாம் வென்றவன் என்றாலும் - எட்டுத் திக்குகளோடு மூவுலகங்களையும் வென்று புகழ் பெற்றவனாயினும்; வீரத்தே நின்ற வீரன் - வீரத் தன்மையிலே நிலை பெற்ற மகாவீரன் (ஆதலால்); அன்று அது கண்ட - அந்நாளில் போர்க்களச் சிதைவாகிய வீரச் செயலைப் புரிந்த; ஆழி அனுமனை - கடல் போன்ற காம்பீரியத் தோற்றத்து அனுமனைக் குறித்து;அமரின் ஆற்றல் - (இவனது) போர் வல்லமை; நன்று என - நன்றாயுள்ளது என்று பாராட்டி; உவகை கொண்டான் - மகிழ்ச்சி கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார் - அது கண்டோர் அனைவரும் (என்ன விளையுமோ) என்று அச்சம் அடைந்தார்கள். ீ வீரச் செயலின்அருமை பெருமைகளை அறிந்து பாராட்டுவது உயர்ந்த வீரர்க்கு இயல்பு. மேகநாதன் வீரத்தே நின்ற வீரன் ஆதலால், அனுமனைப் பாராட்டி, அமரின் ஆற்றல் நன்று என உவகை கொண்டான் என்க. என்ப; மன்; ஓ - அசை நிலைகள். (40) |