5759.

கண்அனார், உயிரே ஒப்பார், கைப் படைக்கலத்தின்
                                    காப்பார்,
எண்ணல் ஆம்தகைமை இல்லார், இறந்து இடைக்
                             கிடந்தார்தம்மை
மண்ணுளே நோக்கிநின்று, வாய் மடித்து, உருத்து,
                             மாயாப்
புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால்,
                             புழுங்குகின்றான்.

     கண்அனார் -கண்போன்று அருமையானவரும்; உயிரே ஒப்பார் -
தன் உயிர் போன்றவரும்; கைபடைக்கலத்தின் காப்பார் - தாம்
தாம்கைதேர்ந்துள்ள ஆயுதங்களைக் கொண்டு, தம்மவர்களைக் காப்பவரும்;
எண்ணல்ஆம் -
நினைத்தற்கும் இயலாத; தகைமை இல்லார் -
பெருமையுடையவருமாகி; இறந்து - அனுமனால் உயிர்நீத்து; இடை கிடந்தார்
தம்மை -
அவ்விடத்திலே விழுந்து கிடந்த அரக்க வீரர்களை; மண்ணுளே
நோக்கி நின்று -
போர்க்களத்திலே பார்த்து நின்று; வாய் மடித்து உருத்து
-
உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு கோபித்து; மாயாபுண்ணுளே கோல்
இட்டு அன்ன -
ஆறாத புண்ணிலே கோலைக் கொண்டு குத்தினாற் போல;
மானத்தால் புழுங்குகின்றான் -
அவமானத்தால் (இந்திரசித்து) (உடலும்
உள்ளமும்) கொதிக்கின்றவனானான்.

     பல சிறப்பிற்குஉரிய வீரர்கள் போர்க்களத்தில் இறந்து கிடந்ததைப்
பார்த்தபோது, இந்திரசித்தன் மனம் மிகவும் வருந்தியது. அவ்வருத்தம்
புண்ணில் கோல் நுழைந்தால் போன்று ஆயிற்று என்பதாம்.          (43)