5762.

தாருகன்குருதி அன்ன குருதியில், தனி மாச் சீயம்
கூர் உகிர்கிளைத்த கொற்றக் கனகன் மெய்க்
                          குழம்பின் தோன்ற,
தேர் உக,கையின் வீரச் சிலை உக, வயிரச் செங்
                           கண்
நீர் உக, குருதிசிந்த, நெருப்பு உக உயிர்த்து
                          நின்றான்.

     தாருகன் குருதிஅன்ன குருதியில் - தாருகாசுரனுடைய இரத்தப்
பெருக்குப் போன்ற இரத்தப் பெருக்கில்; தனிமாசீயம் கூர் உகிர் கிளைத்த
-
ஒப்பற்ற நரசிங்கமூர்த்தி, தனது கூரிய நகங்களால் கிளறிப் பிளந்த;
கொற்றகனகன் மெய்குழம்பின் தோன்ற - வெற்றியை உடைய இரணியனது
உடல் குழம்பாகக் கலக்கப்பட்டுக் கிடந்ததுபோல் உருத் தெரியாமல் (தன்
தம்பியின் உடல்) கிடந்து விளங்க (அதனைக் கண்டு); தேர் உக - தான் ஏறி
வந்த தேரும் நிலை குலைய; கையின் வீர சிலை  உக - தன் கையில்
பிடித்திருந்த வீரத் தன்மையிற் சிறந்த வில்லும் நழுவ; வயிரம் செங்கண் நீர்
உக குருதி சிந்த -
பகைமையைக் காட்டும் தனது சிவந்த கண்கள் நீரையும்
இரத்தத்தையும் சிந்த; நெருப்பு உக உயிர்த்து நின்றான் - நெருப்பையும்
கக்க (இந்திரசித்து) பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றான்.

     அக்க குமாரன்உடல் விழுந்து கிடந்த இடத்தின் இரத்தப் பெருக்குக்கு,
தாருகன் இரத்தமும், அது உருத்தெரியாமல் சிதைந்து கிடந்ததற்கு, இரணியன்
உடலும் உவமைகள். அவ்வுடலைக் கண்ட இந்திரசித்து உயிர்த்து நின்றான்
என்பதாம்.

     தாருகன்: ஓர்அசுரன்: காளிதேவியால் அழிக்கப்பட்டவன்; 'தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்' (சிலப். 20: 39-40)            (46)