5767. | 'கட்டு ஏறு,நறுங் கமழ் கண்ணி, இக் காளை என் கைப் பட்டால், அதுவேஅவ் இராவணன் பாடும் ஆகும்; "கெட்டேம்" எனஎண்ணி, அக் கேடு அருங் கற்பினாளை விட்டு ஏகும்; அதுஅன்றி, அரக்கரும் வெம்மை தீர்வார். |
நறுங் கமழ்கண்ணி - மிக்க மணம் வீசுகின்ற மாலையை அணிந்த; இக்கட்டேறு காளை - இந்த வீர வெறிகொண்ட காளை போல்வான்; என் கைப்பட்டால் - என் கையால் இறந்தால்; அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும் - அச்செயலே அந்த இராவணன் அழிவாகவும் முடியும்; 'கெட்டேம்' என எண்ணி - (ஆகவே இராவணன்) இனி நாம் தவறாமல் அழிவோம் என்று நினைத்து; அக்கேடு அருங் கற்பினாளை விட்டு ஏகும் - அந்தக் கெடுதல் இல்லாத கற்பினளான சீதா பிராட்டியை (இராமபிரானிடம்) கொண்டு வந்து விட்டுச் செல்வான்; அது அன்றி - அதுவும் அல்லாமல்; அரக்கரும் வெம்மை தீர்வார் - அரக்கர்களும் தமது செருக்கு அடங்கிக் கொடுமை ஒழிவார்கள். இந்திரசித்துஅழிந்தால் இராவணன் அழிவான். இராவணன் வலிமைக்கு இந்திரசித்தே மூலமாவான் என்பது அனுமன் கருத்து. (51) |