இந்திரசித்தும்அனுமனும் பலவகையாகப் பொருதல் 5775. | சிகை எழும்சுடர் வாளிகள், இந்திரசித்து, மிகை எழும்சினத்து அனுமன்மேல் விட்டன, வெந்து, புகை எழுந்தன,எரிந்தன, கரிந்தன போத,- நகை எழுந்தன,அழிந்தன, வான் உளோர் நாட்டம். |
மிகை எழும்சினத்து அனுமன் மேல் - பொங்கி எழும் கோபத்தை உடைய அனுமன்மீது; இந்திர சித்து விட்டன - இந்திர சித்து (தூரத்திலிருந்துதொடுத்து) விட்டவையாகிய; சிகை எழும் சுடர் வாளிகள் - கொழுந்துவிட்டுஎரியும் அம்புகள்; வெந்து புகை எழுந்தன - வெந்து புகை கிளம்பப்பெற்றவையும்; எரிந்தன கரிந்தன - எரியப்பட்டொழிந்தவையும், தீய்ந்துபோனவையுமாய்; போத - (அவன் உடலைச் சிறிதும்) ஊறுபடுத்தாதொழிய;நகை எழுந்தன - (அது கண்ட இந்திரசித்துக்குக் கோபத்தால்) சிரிப்புஉண்டாயின; வான் உளோர் நாட்டம் அழிந்தன - (இனி என்னாகுமோ என்று அஞ்சி மனம் கலங்கியதனால்) தேவர்களுடைய கண்களும் கலக்கம்அடைந்தன. அனுமனதுசினத்தீச்சுடர், இந்திரசித்து வீசிய அம்புகளைச் சுட்டுப் பயனற்றவை ஆக்கின என்பது கருத்து. (59) |