| 5776.. | தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப் பாரின் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத் தோள் வீரர் வீரனும்,முறுவலும் வெகுளியும் வீங்க, 'வாரும், வாரும்' என்று அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான். |
தேரும்,யானையும், புரவியும், அரக்கரும் சிந்தி பாரின் வீழ்தலும் -தேர்களும், யானைகளும், குதிரைகளும், அரக்கப் போர் வீரர்களும் சிதறி, தரையில் அடிபட்டு விழுந்தவுடன்; தான் ஒரு தனி நின்ற - தான் ஒருவன் மாத்திரமே தன்னந்தனியாய் எஞ்சி நின்ற; பணை தோள் வீரர் வீரனும் - பருத்த தோள்களை உடைய மகாவீரனாகிய இந்திரசித்தும்; முறுவலும் வெகுளியும் வீங்க - புன் சிரிப்பும் கோபமும் அதிகரிக்க; வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன் மேல் வந்தான் - வாருங்கள் வாருங்கள் என்று மேன்மேலும் உற்சாகத்தோடு கூப்பிடுகின்ற அனுமன்மீது எதிர்த்துப் போரிட வந்தான். வாரும் வாரும் என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இகழ்ச்சியுடன் அழைதத் அனுமனுடன் போர் செய்ய வந்தான் இந்திரசித்து. (60)
|