5777. | புரந்தரன்தலை பொதிர் எறிந்திட, புயல் வானில் பரந்த பல்உரும்ஏற்றுஇனம் வெறித்து உயிர் பதைப்ப, நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் சிரம் துளங்கிட,அரக்கன் வெஞ் சிலையைநாண் தெறித்தான். |
புரந்தரன் தலைபொதிர் எறிந்திட - இந்திரன் தலைநடுக்கம் மேலிடவும்; வானில் பரந்த புயல் பல் உரும் ஏற்று இனம் - ஆகாயத்தில் பரந்து விளங்கிய மேகங்களில் உள்ள பல பெரிய இடிகளின் கூட்டம்; வெறித்து உயிர் பதைப்ப - அச்சத்தால் மயக்கம் கொண்டு உயிர் நடுங்கவும்; நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் - எப்போதும் உலகம் முழுவதையும் தாங்கிக் கொண்டுள்ள நீண்ட பாம்பாகிய ஆதிசேடன்; சிரம் துளங்கிட - தன் ஆயிரம் தலைகளும் அச்சத்தால் நடுங்கவும்; அரக்கன் வெஞ்சிலையை நாண் தெறித்தான் - அரக்கனாகிய இந்திரசித்து, தன் வில்லின் கொடிய நாணைக் கை விரலால் தெறித்து ஒலி எழுப்பினான். இந்திரசித்துதனது வில்லின் நாணைத் தெறித்த போது, அச்சத்தால் நடுங்கிய பிறரது நடுக்கம் கூறப்பட்டது. பொதிர் - நடுக்கம். (61) |