| 5780. | 'நாளுக்குஎல்லையும், நிருதராய் உலகத்தை நலியும் கோளுக்குஎல்லையும், கொடுந் தொழிற்கு எல்லையும், கொடியீர் ! வாளுக்குஎல்லையும் வந்தன; வகை கொண்டு வந்தேன் தோளுக்கு எல்லைஒன்று இல்லை' என்று அனுமனும் சொன்னான். |
கொடியீர் ! -கொடியஅரக்கர்களே !; நாளுக்கு எல்லையும் - உங்கள் வாழ்நாளுக்கு ஒரு முடிவும்; நிருதராய் உலகத்தை நலியும் கோளுக்கு எல்லையும் -அரக்கர்களாய் உலகத்தை வருத்தும் உங்கள் கொள்கைக்கு ஒரு முடிவும்; கொடும் தொழிற்கு எல்லையும் - உங்கள் கொடிய செய்கைகளாகிய பாவத்திற்கு ஒரு முடிவும்; வாளுக்கு எல்லையும் வந்தன - உங்கள் வாள் முதலிய படைக்கலங்களுக்கு ஒரு முடிவும் இப்போது வந்துவிட்டன; வகை கொண்டு வந்தேன் - அதற்குரிய உபாயங்கொண்டு இங்கேயான் வந்துள்ளேன்; தோளுக்கு எல்லை ஒன்று இல்லை - (ஆனால்) என் தோளாற்றலுக்கு முடிவு சிறிதும் உண்டாகாது; என்று, அனுமனும் சொன்னான் - இவ்வாறு அனுமனும் இந்திரசித்துக்கு மறுமொழி கூறினான். (64) |