5782. | குறிதுவான் என்று குறைந்திலன், நெடுஞ்சினம் கொண்டான், மறியும் வெண்திரை மா கடல் உலகு எலாம் வழங்கி, சிறிய தாய்சொன்ன திருமொழி சென்னியில் சூடி, நெறியில் நின்றதன் நாயகன் புகழ் என, நிமிர்ந்தான். |
கொடும்சினம் கொண்டான் - (கணைகள் அழுந்தப் பெற்ற அனுமன்) கொடிய கோபம் கொண்டு; வான் குறிது என்று குறைந்திலன் - ஆகாயம் உயர்வு போதாது என்று தன் வடிவு குறுகாதவனாய் (வான்முகட்டி)னும் மேலாக வளர்ந்து); சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி - தன் சிறியதாயான கைகேயி சொன்ன கட்டளை மொழிகளைத் தன் தலையால் ஏற்று; மறியும் வெண் திரை மாகடல் உலகு எலாம் வழங்கி - மடங்குகின்றவெண்மையான அலைகளை உடைய பெரிய கடலினால் சூழப்பட்ட உலகம்முழுவதையும் (தன் தம்பியாகிய பரதனுக்கு) அளித்து; நெறியில் நின்ற தன்நாயகன் புகழ் என - அறநெறியில் தங்கி நின்ற தனது தலைவனானஇராமபிரான் புகழேபோல; நிமிர்ந்தான் - பேருரு எடுத்துக் கொண்டுநின்றான். இராமபிரான்புகழ் அனுமனின் நெடுமைக்கு உவமை கூறப்பட்டது. (66) |