5784.

நீண்டவீரனும், நெடுந் தடங் கைகளை நீட்டி,
ஈண்டு வெஞ் சரம்எய்தன எய்திடாவண்ணம்,
மீண்டு போய்விழ வீசி, ஆங்கு அவன் மிடல்
                               தடந் தேர்
பூண்ட பேயொடு,சாரதி தரைப்பட, புடைத்தான்.

     நீண்டவீரனும் - அவ்வாறு பேருருக் கொண்ட வீரனான அனுமனும்;
நெடும் தடம் கைகளை நீட்டி -
நீண்ட பெரிய தனது கைகளை எதிரிலே
நீளச் செலுத்தி; எய்தன ஈண்டு வெம்சரம் எய்திடா வண்ணம் -
(இந்திரசித்தால்) எய்யப் பட்டு விரைந்து வருகின்ற கொடிய அம்புகள்
தன்னுடம்பில் படாதபடி; மீண்டு போய் விழ வீசி - திரும்பி, அவன் மேல்
போய் விழுமாறு வீசி எறிந்து விட்டு; அங்கு அவன் மிடல் தடம் தேர்
பூண் பேயொடு -
அங்கே, அவனது வலிமையுள்ள பெரிய தேரில் கட்டிய
பேய்களையும்; சாரதி தரைபட புடைத்தான் - தேர்ப்பாகனையும் கீழே
விழுந்து இறக்குமாறு அடித்தான்.                                (68)