5788. | நூறு நூறுபோர் வாளி, ஓர் தொடை கொடு, நொய்தின், மாறு இல் வெஞ்சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான்; ஊறு, தன் நெடு மேனியில், பல பட, ஒல்கி, ஏறு சேவகன்தூதனும், சிறிது போது இருந்தான். |
மாறு இல் வெம்சினத்து இராவணன் மகன் - எதிர் இல்லாத கொடியகோபத்தை உடைய இராவணனது மகனான இந்திரசித்து; போர்வாளி நூறுநூறு ஓர் தொடை கொடு - போரிற் சிறந்த நூறு நூறு அம்புகளை ஒரு தொடுப்பிலே கொண்டு; நொய்தின் சிலை வளைத்தான் - விரைவில், அவ்வில்லை வளைத்து எய்தான்; ஏறு சேவகன் தூதனும் - சிறந்த வீரனாகிய இராமபிரானுடைய தூதனான அனுமனும்; தன் நெடு மேனியில் ஊறு பலபட - (அந்த அம்புகளால்) தனது பெரிய உடம்பில் பல புண்கள் உண்டாக; சிறிது போது ஒல்கி இருந்தான் - சிறிது நேரம் தளர்ச்சியுற்றிருந்தான். ஏறு சேவகன்; 'ஏறுசேவகனார்' - (திருவாய்மொழி 6.1.9) பகைவர் திரளிலும் ஏறிய (மதிக்கப் பெற்ற) வீரம் உள்ளவர் - என்பது முன்னோர் உரை. (72) |