5790. | பார மா மரம் முடியுடைத் தலையிடைப் படலும், தாரையின் நெடுங்கற்றைகள் சொரிவன தயங்க, ஆர மால் வரைஅருவியின் அழி கொழுங் குருதி சோர நின்றுஉடல் துளங்கினன்-அமரரைத் தொலைத்தான். |
அமரரைத்தொலைத்தான் - தேவர்களை வென்றவனானஇந்திரசித்து; முடியுடைத் தலையிடை - கிரீடம் அணிந்த தனது தலையின் மேல்; பார மாமரம் படலும் - வலியதும் பெரியதுமான அந்த மராமரம் பட்ட அளவிலே; நெடும் கற்றைகள் தாரையின் சொரிவன தயங்க - (கீரிடத்தில் உள்ள மாணிக்கங்களின்) நீண்ட ஒளித் தொகுதிகள் ஒழுங்காக மேற் சொரிவனவற்றைப் போன்று விளங்கும்படி; மால் வரை அருவியின் - பெரிய மலையிலிருந்து வருகின்ற நீர் அருவிபோல; அழி கொழுங்குருதி ஆர சோர - வழிகின்ற கொழுமையான இரத்தம் மிகுதியாகப் பெருக; நின்று, உடல் துளங்கினான் - (ஏங்கித் தளர்ச்சியுற்று) நின்று, உடம்பு நடுங்கினான். (74) |