5791.

நின்று,போதம் வந்துறுதலும், நிறை பிறை எயிற்றைத்
தின்று, தேவரும்முனிவரும் அவுணரும் திகைப்ப,
குன்றுபோல் நெடுமாருதி ஆகமும் குலுங்க,
ஒன்று போல்வன,ஆயிரம் பகழி கோத்து உய்த்தான்.

     நின்று - (இந்திரசித்து)சிறிது போது அயர்ச்சியுற்று நின்று; போதம்
வந்து உறுதலும் -
பிறகு அறிவு வந்து கூடின அளவில்; நிறை பிறை
எயிற்றை தின்று -
தன் வாயில் நிறைந்துள்ளனவும் பிறைச்சந்திரன்
போன்றனவுமான பற்களைக் கோபத்தினால் கடித்து; தேவரும், முனிவரும்
அவுணரும் திகைப்ப -
தேவர்களும் இருடிகளும் அசுரர்களும் யாதாகுமோ
என்று ஏக்கமுற; குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க - மலை
போன்ற உயர்ந்த வடிவமுள்ள அனுமனது உடலும் நடுங்க; ஒன்று போல்
வன -
ஒரே தன்மையான (வேறுபாடு இல்லாத); ஆயிரம் பகழி கோத்து
உய்த்தான் -
ஆயிரம் அம்புகளை, வில்லில் பூட்டி அனுமன் மீது
செலுத்தினான்.                                              (75)