5794.

விழுந்துபார் அடையாமுனம், மின் எனும் எயிற்றான்,
எழுந்து, மாவிசும்பு எய்தினன்; இடை, அவன்
                                  படையில்,
செழுந் திண் மாமணித் தேர்க் குலம் யாவையும்
                                  சிதைய
உழுந்துபேர்வதன்முன், நெடு மாருதி உதைத்தான்.

     மின் எனும்எயிற்றான் - மின்னலைப் போல ஒளிவீசும் பற்களை
உடைய இந்திரசித்து; விழுந்து பார் அடையா முனம் - விழுந்து தரையை
அடைவதன் முன்னமே; எழுந்து மா விசும்பு எய்தினன் - எழுந்து, பெரிய
ஆகாயத்தை அடைந்தான்; இடை - அதற்கு இடையே; நெடு மாருதி -
நீண்ட உருவுடைய அனுமான்; உழுந்து பேர்வதன் முன் - ஒரு உளுந்து
உருளும் அளவினுள்ளே (விரைவாக); அவன் படையில் செழுந்திண்
மாமணி தேர்க்குலம் யாவையும் -
இந்திரசித்துவின் சேனையில் உள்ள
பெரிய வலிய இரத்தினங்கள் பதித்த தேர்க்கூட்டம் எல்லாம்; சிதைய
உதைத்தான் -
அழியும்படி உதைத்தான்.

     இந்திரசித்துதேரோடு நிலத்தில் விழுந்தவுடன், சிறிதும் தாமதிக்காது
எழுந்து மேற் சென்றான் என்பதும், அவ்வாறு, அவன் மேற்செல்லும் கால
அளவிற்குள் (உளுந்து உருளும் நேரத்துக்குள்) அவனுடைய மற்றைய
தேர்க்குலத்தை அனுமன் உதைத்துச் சிதைத்தான் என்பதும் அதிவிரைவில்
நிகழ்ந்த செயல்கள் ஆகும்.                                (78)