அயன் படைக்குஅடங்கிய அனுமனிடம் இந்திரசித்து வருதல்

5798.

தணிப்பஅரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ்
                            தறுகண்
பணிக்குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றி,
துணிக்க உற்று,உயர், கலுழனும் துணுக்குற, சுற்றிப்
பிணித்தது, அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க.

     தணிப்பு அரும் -எவராலும் அடக்குதற்கு அரியதான; பெரும்
படைக்கலம் -
பெரிய அந்த அத்திரமானது; தழல் உமிழ் தறுகண் - கனல்
வீசும் கொடுமை வாய்ந்த; பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி
-
பாம்புக் கூட்டங்களுக்கு அரசனுடைய வடிவத்தை ஏற்றுக் கொண்டு;
துணிக்க உற்று உயர் கலுழனும் -
அதனைத் துண்டிக்க வந்த உயர எழும்
கருடனும்; துணுக்குற - அஞ்சும்படி; அப் பெரு மாருதி தோள்களை
பிறங்க சுற்றி பிணித்தது -
அந்தப் பெரிய அனுமன் தோள்களை நன்றாகச்
சுற்றிக் கொண்டு கட்டிவிட்டது.

     பாம்புகளை எளிதில் அழிக்கும் தன்மையதான கருடனும் அஞ்சும்படி,
பெரும் பாம்பின் வடிவத்துடன் சென்ற பிரமாத்திரம் அனுமன் தோள்களைப்
பிணித்தது என்க.                                              (82)