5800.

சாய்ந்தமாருதி, சதுமுகன் படை எனும் தன்மை
ஆய்ந்து, 'மற்றுஇதன் ஆணையை அவமதித்து
                          அகறல்
ஏய்ந்தது அன்று'என எண்ணினன், கண் முகிழ்த்து
                          இருந்தான்;
'ஓய்ந்தது ஆம்இவன் வலி' என, அரக்கன்
                          வந்துற்றான்.

     சாய்ந்த மாருதி- கீழேவிழுந்த அனுமன்; சதுமுகன் படை எனும்
தன்மை ஆய்ந்து -
(தன் மேற் செலுத்தியது) பிரம்மாத்திரம் என்னும்
உண்மையை உணர்ந்தறிந்து; இதன் ஆணையை அவமதித்து அகறல்
ஏய்ந்தது அன்று என எண்ணினன் -
இதன் கட்டளையை இகழ்ந்து
இதனைவிட்டு நீங்குதல் தக்கதன்று எனக் கருதியவனாய்; கண் முகிழ்த்து
இருந்தான் -
கண்ணை மூடிக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டவன் போல்
இருந்தான்; அரக்கன் 'இவன் வலி ஓய்ந்தது ஆம்' என - அரக்கனாகிய
இந்திரசித்து, இவனுடையவலிமை ஒழிந்துவிட்டது என்று எண்ணி; வந்துற்றான்
-
அனுமன் அருகில் வந்தடைந்தான்.

     வர பலத்தால்பிரம்மாத்திரத்தையும் கடக்கும் ஆற்றல் உள்ளவனாயினும்,
அனுமன் பிரம்ம தேவனைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற
பெருந்தகையினால், அதற்குக் கட்டுப்பட்டிருந்தான் என்க.            (84)