5803. | கறுத்தமாசுணம், கனக மா மேனியைக் கட்ட, அறத்துக்கு ஆங்குஒரு தனித் துணை என நின்ற அனுமன், மறத்து, மாருதம்பொருத நாள், வாள் அரா அரசு புறத்துச் சுற்றியமேரு மால் வரையையும் போன்றான். |
கறுத்த மாசுணம் -கோபம்கொண்ட அந்தப் பிரம்மாத்திரமாகிய பாம்பு; கனகமா மேனியை கட்ட - பொன்னிறமான அனுமன் திருமேனியை வலிதில் இறுக்கிப் பிணிக்க; அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் - தரும தேவதைக்கு, அந்த இலங்கையில் தான் ஒருவனே துணைவனாக இருந்த அனுமன்; மறத்து மாருதம் பொருத நாள் வாள் அர அரசு - வலிமையோடு காற்று வீசியடித்த காலத்து, ஒளி தங்கிய அரவுக்கரசனான ஆதிசேடன்; புறத்து சுற்றிய - தன் வெளிப் புறமெல்லாம் நன்றாகச் சுற்றிக் கொண்டதாய் இருந்த; மேருமால் வரையையும்போன்றான் - மேரு மலையையும் ஒத்து விளங்கினான். பெரு வடிவமுள்ளஅனுமனைச் சூழ்ந்து இறுக்கிய பாம்புக்கு, மேருமலையை வளைத்து இறுக்கிய ஆதி சேடன் உவமையாக்கப்பட்டது. அனுமனுக்கு மேரு மலை உவமை. (87) |