5809. | 'ஓங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை நீங்கலம்;இன்றொடு நீங்கினாம்; இனி ஏங்கலம்; இவன்சிரத்து இருந்து அலால் திரு வாங்கலம்' என்றுஅழும் மாதரார் பலர். |
ஓங்கல் அம்பெருவலி உயிரின் அன்பரை - 'மலை போன்ற மிக்க வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை; நீங்கலம் - இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் - (இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம் ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால் திருவாங்கலம் - இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்'; என்று அழும் மாதரார் பலர் - என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர். 'தாலி வாங்கும்துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன் தலையின் மேல் தான் நடத்துவோம்' என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன் கூறினர் என்க. (5) |