5814.

'காந்துறுகதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர்சேர்த்தெனப் பொலியும், வாள் முகம்;

தேர்ந்து, உறுபொருள் பெற எண்ணி, செய்யுமின்;
வேந்து உறல்பழுது' என விளம்புவார், சிலர்.

     காந்து உறு, கதழ்எயிற்று - எரிக்கும்தன்மையுள்ளதும்
கொடுமையுள்ளதுமான நச்சுப்பற்களை உடைய; அரவின் கட்டு -
பாம்பினாலாகிய இந்தப் பிணிப்பு; ஒரு பூந்துணர் சேர்த்து என - ஒரு பூ
மாலை கொண்டு கட்டினது போல; வாள் முகம் பொலியும் - ஒளியுள்ள
(இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது; தேர்ந்து - (ஆதலால்) விரைவுபடாது
ஆலோசித்து; உறுபொருள் பெற எண்ணி - நல்ல பயனைப் பெறுமாறு
சிந்தித்து; செய்யுமின் -  (அதற்கு அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச்)
செய்யுங்கள்; வேந்து உறல் பழுது - இந் நிலையில் இக்குரங்கு) அரசனிடம்
போய்ச் சேர்தல் பயனுடையதன்று; என, விளம்புவார் சிலர் - என்று சில
அரக்கர்கள் சொல்வார்கள்.

     பிரம்மாத்திரப்பிணிப்பு, அனுமனுக்குப் பூமாலை பூண்டது போன்றுதான்
இருந்தது; வருத்தமி்ல்லை என்பது கருத்து.                        (10)