5819. | 'கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன், மயில் இயல்சீதைதன் கற்பின் மாட்சியால், எயிலுடைத் திருநகர் சிதைப்ப எய்தினன், அயில் எயிற்றுஒரு குரங்கு ஆய்' என்பார், பலர். |
கயிலையின்ஒருதனி கணிச்சிவானவன் - கயிலைமலை மீது உள்ள ஒப்பற்ற மழு என்னும் ஆயுதத்தை ஏந்திய சிவபிரானாகிய தேவன்; மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியால் - மயில் போன்ற சாயலை உடைய சீதையின் பெருமையால்; அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் - கூரிய பற்களை உடைய ஒரு குரங்கின் வடிவமாய்; எயில் உடை திருநகர் சிதைப்ப எய்தினன் - மதில்களை உடைய இந்த அழகிய இலங்கை நகரை அழிக்கவந்து அடைந்துள்ளான்; என்பார் பலர் - என்று பல அரக்கர்கள் கூறுவாராயினர். (15) |