இந்திரசித்துஅனுமனை இராவணன் மாளிகைக்குக் கொண்டு செல்லுதல் 5829. | கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும், புடை வரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ, விடைபிணிப்புண்டது போலும் வீரனை, குடை கெழு மன்னன்இல், கொண்டு போயினான். |
கடவுளர்க்குஅரசனை - (இவ்வாறாக) தேவர்களுக்கு தலைவனான இந்திரனை; கடந்த தோன்றலும் - வென்ற வீரனான இந்திரசித்தும்; புடைவரும் பெரும் படை புணரி - பக்கங்களில் சூழ்ந்து வருகின்ற பெரிய சேனையாகிய கடல்; போர்த்து எழ - கவிந்து வர; விடை பிணிப்புண்டது போலும் வீரனை - ஒரு காளை கட்டுண்டது போல விளங்கும் அனுமனை; குடைகெழு மன்னன் இல் - கொற்றக் குடையோடு விளங்கும் அரசனாகிய இராவணனது அரண்மனைக்கு; கொண்டு போயினான் - கொண்டு சென்றான். விடை,ஆண்மைக்கும் பெருமிதத்துக்கும் உறைவிடமானது. (25) |