தூதுவர் நற்செய்திசொல்ல இராவணன் பரிசளித்தல் 

5830.

தூதுவர்ஓடினர்;தொழுது, தொல்லை நாள்
மாதிரம்கடந்தவற் குறுகி, 'மன்ன ! நின்
காதலன் மரைமலர்க் கடவுள் வாளியால்,
ஏதில் வானரம்பிணிப்புண்டதாம்' என்றார்.

     தூதுவர் ஓடினர் - இந்திரசித்தால் அனுப்பப்பெற்ற தூதர்கள்
ஓடிச்சென்று; தொல்லை நாள் - பண்டு; மாதிரம் கடந்தவன் - திசைகளை
எல்லாம் வென்றவனாகிய இராவணனை; குறுகி - அணுகி; தொழுது -
வணங்கி; மன்ன - 'அரசனே !; நின் காதலன் - உனது மகனான
இந்திரசித்து; மரைமலர் கடவுள் வாளியால் - தாமரைமலர் மீது விளங்கும்
பிரம்மதேவனது படையாகிய அத்திரத்தால், (பிரம்மாத்திரம்); ஏதில் வானரம்
பிணிப்புண்டது என்றார் -
பகைமை கொண்ட குரங்கு கட்டுப்பட்டுள்ளது
என்று சொன்னார்கள்.

     தூதுவரின் செயலும்சொல்லும் கூறப்பட்டது.                (26)