5831. | கேட்டலும்-கிளர் சுடர் கெட்ட வான் என ஈட்டு இருள்விழுங்கிய மார்பின், யானையின் கோட்டு எதிர்பொருத பேர் ஆரம் கொண்டு, எதிர் நீட்டினன்-உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான். |
கேட்டலும் -அதனைக்கேட்டவுடன்; உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் - மகிழ்ச்சியால் ஓங்கிய மனமுடைய இராவணன்; கிளரீ சுடர் கெட்ட வான் என - விளங்குகின்ற (இரவில்) சந்திரன் ஒழியப் பெற்ற ஆகாயம் போல; ஈட்டு இருள் விழுங்கிய - செறிதலுள்ள இருளினால் விழுங்கப்பட்ட (மிகக்கறுத்த); மார்பின் - தன் மார்பினிடத்து; யானையின் கோடு எதிர் பொரு - (முன்) திக்கஜங்களின் தந்தங்களோடு புரண்டு மோதிக் கொண்டிருந்த; பேர் ஆரம் கொண்டு எதிர் நீட்டினான் - பெரிய முத்துமாலையைக் கழற்றிக் கொண்டு (நற்செய்தி சொன்ன தூதர்க்கு) வெகுமதியாகக் கொடுத்தான். தூதுவர் கூறியநற்செய்தி இராவணனை எவ்வளவு மகிழ்வித்துள்ளது என்பதை, அவன் தூதுவர்க்குக் கொடுத்த முத்து மாலைப் பரிசு தெரிவிக்கின்றது. (27) |