குரங்கைக்கொல்லாது கொணர, இராவணன் பணித்தல். 

5832.

எல்லை இல்உவகையால் இவர்ந்த தோளினன்,
புல்லுற மலர்ந்தகண் குமுதப் பூவினன்,
'ஓல்லையின் ஓடி,நீர் உரைத்து, என் ஆணையால்,
"கொல்லலை தருக"எனக் கூறுவீர்' என்றான்.

     எல்லை இல்உவகையால் - அளவற்றமகிழ்ச்சியினால்; இவர்ந்த
தோளினன் -
பூரித்த தோள்களை உடையவனும்; புல்லுற மலர்ந்தகண்
குமுதப் பூவினன் -
தழுவுமாறு நன்று மலர்ந்த கண்களாகிய செவ்வாம்பல்
மலர்களை உடையவனுமாகிய இராவணன்; நீர் ஒல்லையின் ஓடி - நீங்கள்
விரைவாக ஓடிச் சென்று; என் ஆணையால் உரைத்து - எனது
கட்டளையாகச் சொல்லி; 'கொல்லலை தருக' என கூறுவீர் என்றான் -
'அந்தக் குரங்கைக் கொல்லாது உயிருடன் கொண்டு இங்குத்தருக' என்று
இந்திரசித்துவிடம் சொல்லுவீர் என்று கூறினான்,                   (28)