கலிவிருத்தம்(வேறு) 

5835.

ஓவியம்புகையுண்டதுபோல், ஒளிர்
பூவின்மெல்லியல் மேனி பொடி உற,
பாவி வேடன்கைப் பார்ப்பு உற, பேதுறும்
தூவி அன்னம்அன்னாள், இவை சொல்லினாள்;

     மேனி பொடி உற -உடம்புபுழுதி படிந்திருக்க (அதனால்); ஓவியம்
புகை உண்டது போல் ஒளிர் -
சித்திரம், புகை மூடி ஒளி குறைந்தது போல
விளங்குகின்ற; பூவின் மெல் இயல் - மலர் போன்ற மென்மைத்
தன்மையளான சீதாபிராட்டி; பாவி வேடன் கை பார்ப்பு உற - பாவியாகிய
ஒரு வேடன் கையில், தன் குஞ்சு அகப்பட்டுக் கொள்ள (அதனால்); பேதுறும்
தூவி அன்னம் அன்னாள் -
வருத்தம் அடைகிற மென்மையான இறகுகளை
உடைய அன்னப்பறவையைப் போன்றவளாய்; இவை சொல்லினாள் -
(அனுமனைக்குறித்து) இவ்வார்த்தைகளைச் சொல்லிப் புலம்பினாள்.

     தாய்க்குத்தன்குழந்தையிடம் உள்ள அவ்வளவு அன்பு, உலகத்தாயான
சீதாபிராட்டிக்கு அனுமனிடம் உள்ளது என்பதை இந்த உவமையால்
உணரலாம். இந்திரசித்துக்கு, பாவி வேடனும், அனுமனுக்கு, வேடன்
கையகப்பட்ட அன்னக் குஞ்சும், சீதைக்கு, அன்னப்பறவையும் உவமைகள்
ஆகும். சொல்லியவார்த்தைகள், அடுத்த நான்கு கவிதைகளில் வருவது. (31)