| 5836. | 'உற்றுஉண்டாய விசும்பை உருவினாய், முற்றுண்டாய்;கலை யாவையும் முற்றுறக் கற்றுண்டாய்; ஒருகள்ள அரக்கனால் பற்றுண்டாய்;இதுவோ அறப் பான்மையே ? |
உற்று உண்டாயவிசும்பை - மிகப் பரந்துள்ளதானஆகாயத்தை; உருவினாய் முற்றுண்டாய் - ஊடுருவிச் சென்று அளவளாவி நிறைந்து; கலையாவையும் முற்றுற கற்றுண்டாய் - சகல கலைகளையும் முழுவதும் பொருந்த (சூரிய பகவானிடம்) கற்றுத் தேர்ந்தாய் (அப்படிப்பட்ட நீ); ஒரு கள்ள அரக்கனால் - ஒரு வஞ்சனை உடையஇராக்கதனால்; பற்றுண்டாய் - சிறைப்படுத்தப் பெற்றாய்; அறப்பான்மை இதுவோ - அறத்தின் இயல்பு இதுதானோ ? 'சகல கலைகளையும்கற்ற நீ, ஒரு கள்ள அரக்கனால் கட்டுண்டாயே' என்று அனுமனைப் பாராட்டி வருந்தினாள் பிராட்டி. ஆற்றலும் அறிவும் பெற்றவர்கள் நன்மை அடைதல்தான் அறத்தின் பான்மை. இங்கு, அதற்கு நேர் மாறான பயன் ஏற்பட்டுள்ளதால் அறத்தின் பான்மையோ ! என்று சீதா பிராட்டி ஐயமுற்றாள் என்க. (32) |